Thursday, February 28, 2019

சித்தர் அகஸ்தியர் போன்ற வர்களுடன் நீங்கள் பேசுவதெப்படி

*தெய்வீகம்!*
*(வாட்ஸ் அப் குழு)*

*(தெய்வீக*
*தகவல் மையம்)*

*அகத்தியரின்*
*அருள்வாக்கு!*

*பகுதி - 39*

*யாருக்கு சித்தர்களின்* கருணை கிட்டுகிறதோ அவரவர்களுக்கு அருள் சட்டென்று கிடைக்கும்.

ஏனோ சிலருக்கு சித்தர்களின் பாக்கியம் கடைசி வரை கிட்டுவதே இல்லை. இது அனுபவப்பட்ட உண்மை.

அன்றைக்கும் அப்படித்தான். ஒரு பன்னிரண்டு வயது சிறுமியை அழைத்துக் கொண்டு அவளது தாயாரும், பாட்டியும் வந்தார்கள். 

"இந்த குழந்தையை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று விஷயத்தைச் சொல்லாமலேயே கண் கலங்கினார்கள்.

நான் அந்த சிறுமியை பார்த்தேன். முகத்தில் துன்ப ரேகைகள் நிறைய தெரிந்தது. கண்களில் மங்கிய ஒளி  தெரிந்தது. பன்னிரண்டு வயதுக்குரிய ஆரோக்கியம் அந்த சிறுமியிடம் இல்லை.

ஏதாவது கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது மட்டும் தெரிந்தது. அந்தச் சிறுமியும் வாய் திறக்கவில்லை. வந்திருந்த அந்தப் பெண்மணிகளும் மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாமல் தலை குனிந்தவாறே அமர்ந்திருந்தனர்.

"என்ன விஷயம் என்று சொன்னால் அகத்தியரிடம் உங்கள் குறையைச் சொல்லி ஏதேனும் வழி கிடைக்குமா? என்று பார்க்கிறேன்" என்றேன்.

நாங்கள் வாய் திறந்து சொல்ல இயலாத நிலை. நீங்களே அகத்தியரிடம் கேட்டுப் பாருங்கள் என்றனர்.

இது ஒருவிதத்தில் தர்ம சங்கடமாக தான் இருந்தது. இனிமேல் இவர்கள் வாய் திறந்து சொல்ல மாட்டார்கள். அகத்தியரிடமே கேட்டு பதில் சொல்வோம் என்று நினைத்து நாடியைப் பிரித்தேன்.

இங்கு மூன்று *ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இருக்கிறார்கள்.*  இவர்களில் ஒருவர் வெளியேறட்டும். பின்பு நாம் அந்தச் சிறுமியின் எதிர்காலத்தைப் பற்றி உரைக்கிறோம்" என்றார் அகத்தியர்.

கட்டை மூடி விட்டு வந்திருந்த மூன்று பேர்களிடமும் அவர்கள் பிறந்த நட்சத்திரம் எது?" என்று கேட்டேன்.

"புனர்பூசம்: என்றார் ஒருவர், இன்னொருவர் "திருவாதிரை" என்றார். அந்தச் சிறுமிக்கு மட்டும் "ஆயில்யம் நட்சத்திரம்" என்றார் உடன் வந்தவர்.

இதை கேட்டதும் எனக்கு குழப்பம் ஏற்பட்டது.

வந்திருந்த மூன்று பெரும் மூன்று விதமான நட்சத்திரங்களில் பிறந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அகத்தியரோ மூன்று பேரும் ஆயில்யம் நட்சத்திரம் என்கிறார்.

ஆயில்யம் நட்சத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் இங்கிருந்து விலகிவிடவேண்டும் என்றால் அந்தச் சிறுமிதான் இந்த இடத்தை விட்டு விலகிச் செல்ல வேண்டும். அப்படியென்றால் அந்தச் சிறுமிதான் இந்த இடத்தை விட்டு விலகிச் செல்ல வேண்டும். அப்படி என்றால் இது சரிபட்டு வரவில்லையே.  வந்திருப்பதே அந்தப் பெண்ணிற்குத் தானே என்று ஒரு சில நிமிடம் திண்டாடிப் போனேன்.

வந்திருந்த மூன்று பேருக்கும் ஜாதகம் இருந்தது. அதை உன்னிப்பாகக் கணித்து, கவனித்துப் பார்த்த பொழுது ஒருவர் புனர்பூசம், இன்னொருவர் திருவாதிரை, அந்தச் சிறுமிக்கு ஆயில்யம் என்று சரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மீண்டும் அகத்தியர் நாடியைப் பிரித்து மறுபடியும் விளக்கம் கேட்டேன்.

அகத்தியர் சொன்னார். இந்த மூன்று பேருமே ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தான். கிரகங்கள் சில வக்கிரமாகிப் பின்னோக்கிச் செல்வதை போல இவர்கள் மூவரில், இந்த சிறுமியைத் தவிர மற்ற இருவருக்கும் நட்சத்திரங்கள் வக்கிரமாகி முன்னே, பின்னே சென்று இருக்கிறது. இது சித்தர்களான எங்களுக்குத் தான் தெரியும். *தெய்வீக சூட்சமம்* என்பது இது தான் என்றார்.

தொடர்ந்து கூறும் போது வயதான பாட்டியை வெளியே அமரச்சொல். அவளும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பின்னர் நான் விளக்குகிறேன், என்று ஒரு புதிரைப் போட்டார்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் அந்தச் சிறுமியின் பட்டியை வெளியே அமரச் சொன்னேன்.  மறுப்பில்லாமல் அந்தப் பாட்டி வெளியே சென்றதும், அகத்தியர் தன் நாடியில் அந்த சிறுமியைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

*"பாவம், புண்ணியம் என்பதை நம்புகிறவர்கள் நம்பட்டும்.  நம்பாதவர்கள் போகட்டும்.*  இந்த சிறுமிக்கு உடலில் எந்த இடத்தில் சிறு காயம் பட்டாலும் ரத்தம் குபு குபு என்று வந்து விடும். அதை நிறுத்த மிகவும் கஷ்டப்படவேண்டும். எளிதில் ரத்தம் உறைந்து காய்ந்து போகாது. சில சமயம் இரண்டு மூன்று நாட்கள் வரை விடாமல் ரத்தம் வந்து கொண்டிருக்கும். இதற்கு வைத்தியத்தில் இடம் இருந்தாலும், அந்த மூலிகைச் செடி இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் முளைக்கும். இந்த மூலிகைச் செடி *கொல்லிமலை, பொதிகைமலை, பர்வதமலை, சதுரகிரி மலையில்* அடர்ந்த காட்டிற்குள் தான் முளைக்கும்.

இதைக் கண்டுபிடித்து அதற்கு சில பக்குவம் செய்து உட்கொண்டால், அந்த உதிரப் போக்கு நின்று விடும்.  இந்த சிறுமிக்கு வந்த நோய் லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும். ஆணாக இருந்தால் எப்படியாவது சமாளித்து விடலாம். இந்த சிறுமியோ சமீபத்தில் தான் பருவம் அடைந்திருக்கிறாள்.  சாதாரண கீறல் விழுந்தாலே உடலிலிருந்து வரும் ரத்தம் எளிதில் நிற்காத பொழுது, பருவமடைந்த இந்தப் பெண்ணுக்கு உதிரப் பேருக்கு பல நாட்கள் இருக்கின்றது.  இதை எந்த வைத்தியத்திலும் சட்டென்று குணப்படுத்த முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.  இது தான் உண்மை" என்றார் *அகத்தியர்.*

இதை படித்ததும் நானே அந்த சிறுமியைப் பார்த்து ஆதங்கப்பட்டேன்.

மாதவிடாய் இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறது.  இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கும். ஒவ்வொரு மாத விலக்கின் பொழுதும் உதிரம் நிற்க பல நாட்கள் ஆகும். உடம்பிலிருந்த ரத்தம் எல்லாம் வீணாகிப் போனால், அதை எப்படி ஈடு செய்வது.  மாத விடாயை தடுக்க முடியாது. அது இயற்கை.  பின்னர் எப்படி இவளது உதிரப் போக்கை நிறுத்துவது?

அதுமட்டுமல்ல, இந்தப் பெண் வளர்ந்து திருமணம் செய்து கொண்டால் பிள்ளைப்பேறு என்பது மிகவும் சிரமமான விஷயம் ஆயிற்றே! முதலில் யார் இந்தப் பெண்ணை துணிந்து திருமணம் செய்து கொள்வார்? என்பது போல பல்வேறு சிந்தனைகள் எனக்கு ஏற்ப்பட்டது.

நான் மவுனமாக இப்படி எல்லாம் சிந்தனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து அந்தச் சிறுமியின் தாயார் பயந்து போனார்.

"என்னங்க... எதாவது உயிருக்கு ஆபத்துன்களா, உண்மையைச் சொல்லுங்க" என்றார் கண்ணீர் மல்க.

"ச்சே... ச்சே.... அதெல்லாம் ஒன்றுமில்லை. குழந்தையின் நோய் விரைவில் தீரும் பயப்பட வேண்டாம், என்று சொல்லிய பின்னர் குழந்தையை வைத்துக் கொண்டு இப்படீல்லாம் கேட்கலாமா?" எனக் கடிந்துகொண்டேன்.

"எல்லோரும் அப்பிடித்தானுன்களே சொல்றாங்க!"

"யார் அந்த எல்லோரும்?"

டாக்டருங்க தான். ஒவ்வொரு மாதவிடாயின் பொழுது ரத்தம் கொடுக்க வேண்டியிருக்குமாம். இந்த பச்ச உடம்புக்கு எப்படிங்க தாங்கும்? என்று சொல்லும் பொழுதே அந்த தாய்க்கு கண்ணீர் கொட்டியது.

அதோடு வாயிலிருக்கும் வார்த்தைகள் வெளியே வரவில்லை.

இல்லையம்மா இதற்க்கு அகத்தியர் ஒரு மூலிகை மருந்து இருக்குன்னு சொல்லியிருக்கார் என்று அந்தப் பெண்மணியைத் தைரியப்படுத்தி பின்பு, நாடி படிக்க ஆரம்பித்தேன்.

*சதுரகிரி மலையிலிருந்து* *ஒரு குறிப்பிட்ட மூலிகைச் செடி, பொதிகை மலையில்* *விளைகின்ற மற்றொரு மூலிகைச் செடி, கொல்லிமலைக் காட்டில் விளையும்* *ஒரு மூலிகைச் செடி ஆகியவற்றை சேகரித்து வந்து நன்றாக சுத்தப்படுத்தி நிழலில் உலர்த்தி அதை பொடி செய்து* *(உலக்கையால் நன்றாக குத்தி) ஒரு வெற்றிலையில் வைத்து அந்த மருந்துடன்* *மலைத்தேனை அதில் கலந்து தினமும் மூன்று வேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தச் சிறுமிக்கு* *ஏற்பட்ட உதிரப் பெருக்கு நோய் முற்றிலும் குணமாகும் என்று* *அற்புதமாக*
*விளக்கினார் ஐயன்.*

இதை கேட்டதும் அந்தத் தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

"என் தாலியை விற்றாவது இந்த மருந்தை வாங்கிக் கொடுக்கிறேன்.  எப்படியும் இவள் குணமாகிவிடுவாள் இல்லையா? என்று ஆதங்கத்தோடு கேட்டாள்.

"கவலைப்படாதே அம்மா!  அகத்தியர் ஒரு போதும் உங்களைக் கை விட மாட்டார்" என்று தைரியம் சொல்லி அனுப்பிவைத்தேன்.

மூன்று மாதம் கழிந்திருக்கும்.

ஒரு நாள் மாலை அந்தச் சிறுமியும் அவளது பெற்றோரும் மிக சந்தோஷமாக என்னைப் பார்க்க வந்தனர்.

சந்தோஷமான செய்தி. அகத்தியர் அய்யா சொன்ன மூலிகைகளை கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுத்தேன். இப்போ அந்த மாதிரியான உதிரப் பெருக்கு தொடர்ச்சியாக இல்லை. எல்லா பெண்களுக்கும் போல மூன்று நாளோடு நிற்கிறது. உடம்பில் அடிப்பட்டாலும் ரத்தம் வருகிறது.  ஆனால் தொடர்ந்து ரத்தம் கொட்டுவதில்லை.  இந்தப் பெண்ணை அகத்தியர் அய்யா தான் காப்பாற்றி விட்டார், என்று அந்தப் பெண்ணின் தாயார் சந்தோஷமாக அந்தக் கண்ணீரோடு சொன்னபோது, உண்மையிலேயே நான் வியந்து போனேன்.  ஆபத்தான நோய்களைக் கூட தீர்த்து வைக்கும் அகத்தியருக்கு நன்றியைச் சொன்னேன்.

அதே சமயம் எனக்கு ஒரு சந்தேகம். அந்த சிறுமி அன்றைக்கும் என்னுடன் பேசவில்லை. சந்தோஷமான இந்தச செய்தியைச் சொன்னபோதும் ஒரு வார்த்தை பேசவில்லை என்ன காரணம்? என்று தேவை இல்லாமல் குறைபட்டுக் கொண்டேன்.

இதற்கு எனக்கு கிடைத்த விடை, அந்த சிறுமி ஒரு ஊமை என்பதுதான்.

*தொடரும்....*

No comments:

Post a Comment