Thursday, February 28, 2019

மனம் திறந்து பாருங்கள் மனம் கமழும்

*மனம்*

*ஆன்மீக சிந்தனைகள்*

நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.

அனைத்து சாஸ்திரங்களும், வேதநூல்களும் மனதை அடக்கும் வழிமுறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் உத்தியை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.

உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்தஆசையை விட்டு விட இடம் தருவதில்லை.

காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும். அதுபோல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.

பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் அருகில் சென்றதும் மறைவது போல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.
-ஆதிசங்கரர்

பணம், பேச்சு, செய்யும் செயல் எல்லாவற்றிலும் அளவுடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது தீமைகளைத் தருகின்ற செயல்களைச் செய்யவே கூடாது.

சத்தியம் என்றால் வாக்கும், மனசும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும்.

போட்டி பொறாமை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவு உண்டாவதில்லை. தேவைகளை அதிகப்படுத்தி கொண்டே போவதால் வேண்டாத செயல்களைச் செய்து பின்னர் அவதிப்பட நேரிடும்.

தர்மம், நீதி என்னும் இரண்டும் சேர்ந்து தான் பண்பு உண்டாகிறது. மனதில் உள்ள அசுத்தங்கள் நீங்கினால் அது தானாகவே பரமாத்மாவின் மீது திரும்பிவிடும்.

பெரும்பாலும் நம்முடைய கோபத்தினால் நமக்கே தீங்கு செய்தவர்களாகிறோம். கோபத்தினால் நமக்கும் நன்மையில்லை; மற்றவர்களுக்கும் நன்மை இல்லை.

பிதுர் காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். தெய்வகாரியங்களுக்கு பக்தி வேண்டும்.

-காஞ்சிப் பெரியவர்.

அகம்பாவத்தை வெற்றி கொள்வது கடினமான செயல். அதில் வெற்றி பெற வேண்டுமானால் பல ஆண்டு முயற்சி தேவை. இரவுபகலாகப் புத்தகங்களைப் படித்து ஒப்பித்துப் பலவருடம் போராடி ஒரு பல்கலைப்பட்டம் பெறுகிறீர்கள்.

ஆன்மிகப் பரீட்சை இதைவிடக் கடுமையானது. இந்தப் பரீட்சையில் வெற்றி பெறுவதால் பிறப்பு, இறப்பு தொடரிலிருந்து விடுதலை கிடைக்கும். நிலையான மகிழ்ச்சி கிடைக்கும்.

சிலர் மனதைப் பஞ்சுப்பொதி போல வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஞானம் சிறு நெருப்புப்பொறியாக பற்றினாலே வெற்றி நிச்சயம். சிலர் காய்ந்த சுள்ளிபோல வைத்திருக்கின்றனர். அதற்கு சிறிது நாளாகும். ஆனால், வெற்றி உறுதிதான். சிலர் ஈரமான விறகுக்கட்டாக மனதை வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஞானத்தீ பட்டாலும் ஈரத்தின் தன்மையால் அணைந்து விடுகிறது.

கற்றவர்களிடமும், ஆன்மிக அனுபவம் கொண்டவர்களிடமும் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள். அப்போது, நாளடைவில் உங்கள் மனமும் புலன்களும் நேர்த்தியாக மாறும். தூயபஞ்சினைப் போல லேசாகி விடும். ஆனால், உலகில் பெரும்பாலானவர்கள் தங்கள் மனங்களையும், புலன்களையும் ஈரவிறகைப் போலவே வைத்து இருக்கிறார்கள். அதனால், கொழுந்து விட்டு எரியும் ஞானத்தீ கூட அஞ்ஞானம் என்னும் ஈரத்தால் அணைக்கப்பட்டு விடுகிறது.

-சாய்பாபா

தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.

சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும் வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த யோகியாகிறான்.

எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்.

வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது. அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக்
கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.

சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல் இருப்பான்.

பகவத் கீதை

மற்றவர்களிடம் கொள்ளும் அன்பாக இருக்கட்டும். உங்கள் தோட்டத்தில் மலரும் பூக்களாகட்டும். வாழ்வில் நீங்கள் அடையும் வெற்றிகளாகட்டும். தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால் அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதை விட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்கத் தவறிவிட்டால் அவை நிகழ்வதில்லை. ஒரு மலரை உருவாக்குவதைவிட, அதற்கான தகுந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கே நாம் முனையவேண்டும். எனவே, தோட்டத்து பூக்களானாலும், உங்களுக்குள் மலரும் மாற்றமானாலும், அதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவதே உங்கள் நோக்கமாக வேண்டும்.

உங்களை கீழ்த்தரமாக நடத்தும் ஒருவரை அதேபோல் நடத்த எந்த விழிப்புணர்வும் தேவை இல்லை. ஆனால், அந்தச் சூழ்நிலையிலும், அமைதி காப்பதற்கு ஏராளமான விழிப்பு உணர்வு இருத்தல் அவசியம்.

உயிர்ப்புடன் வாழ்தல் என்பது அற்பமான விஷயம் அல்ல. அசாதாரணமான ஒரு நிகழ்வு அது. உயிர்ப்புடன் இருத்தல் இந்தப் பூமியில் மட்டுமல்ல. பிரபஞ்சத்திலேயே அபூர்வமான ஒரு செயல்.

எல்லாவற்றையும் படைத்தவன் உங்களுக்குள் இருக்கிறான். படைப்பின் மூலம் உங்களுக்குள் தான் உயிர்ப்புடன் துடித்துக் கொண்டு இருக்கிறது. அதைக் கவனிக்காமல் வேறு எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?

-சத்குரு ஜக்கிவாசுதேவ்.

உங்களுக்குப் பிடித்தமான கடவுள் படத்தின் முன் கொஞ்சநேரம் அமர்ந்திருங்கள். பின்னர் அந்த இறைவுருவத்தை மனதிற்குள்ளே தியானிக்கும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அந்த உருவம் மனதில் மறைந்தவுடன், மீண்டும் கண்ணைத் திறந்து இறைத்திருவுருவைச் சற்று பாருங்கள். படிப்படியாக, கடவுளின் உருவம் எப்போதும் நம் நினைவில் நிற்கத் தொடங்கும். நீங்களே கடவுளுடன் பேசுவது போலவும் கற்பனை செய்யலாம்.
"அம்மா! என்னைக் கைவிட்டு விடாதே. உன்னை அன்றி வேறு யார் எனக்குத் துணை!'' என்று மானசீகமாக பிரார்த்தனை செய்யுங்கள். அம்பிகையின் இரு திருவடிகளையும் பற்றிக் கொள்ளுங்கள். மனம் உருகி உங்கள் வேண்டுதலை வாய்விட்டுக் கூறுங்கள். இப்படி நாள்தோறும் தியானம் செய்து பழகப் பழக மனதில் எண்ண அலைகள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவிடும். ஆனந்த ஊற்று மனதில் உற்பத்தியாகி, மகிழ்ச்சி மேலிடும். தண்ணீரில் உள்ள கசடுகளை வடிப்பான் தடுத்து நிறுத்துவதுபோல, மனதில் உள்ள மாசு எண்ணங்களை இப்பிரார்த்தனை வடிகட்டிவிடும். குழந்தைப் பருவத்திலிருந்தே இப்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது.

-மாதா அமிர்தானந்தமயி.

அனைவருக்கும் அவரவருக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். துடைப்பமாக இருந்தாலும், அதற்குரிய மரியாதையைத் தரவேண்டும். எல்லா வேலைகளையும் பக்திபூர்வமாகச் செய்ய வேண்டும். * எதைச் சாப்பிட்டாலும், முதலில் அதைக் கடவுளுக்கு நிவேதனம் செய்தல் வேண்டும். கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யாத எதையும் உண்ணக்கூடாது.

ஒரு பொருளின் மதிப்பு அதன் விலையைப் பொறுத்து அமைவதில்லை. அப்பொருளை எவ்வளவு அன்புடன் கொடுக்கின்றனர். என்பதைப் பொறுத்தே அதனுடைய மதிப்பு உயரும். * சோம்பலினால் உடல் மட்டுமல்ல. நம் மனமும் கெட்டுவிடும். அதனால், எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள். அதனால் நாம் நம் கடமையில் முழுமையாக நம்மை இணைத்துக் கொண்டு ஆர்வமுடன் செயல்படவேண்டும்.

துன்பங்களால் நொந்து வருந்துபவர்கள் தங்கள் உள்ளங்களை இறைவனிடம் திறந்து காட்டுங்கள். ""இறைவா! எனக்கு அமைதி கொடு!'' என்று மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள்.

சாரதாதேவியார்.

தியானம் செய்வது எப்படி?
ஒருவன் இடைவிடாமல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான முறை மந்திரத்தை ஜபிக்கும்போது, அவனுடைய மனம் தானாகவே வலிமையடைந்து, தியானத்தில் மூழ்குகிறது. இறுதியில் குண்டலினி சக்தி அவனிடம் விழித்தெழுகிறது. தூய்மையான மனம் படைத்தவர்கள் தியானம் செய்யும்போது, அவர்கள் ஜெபிக்கும் மந்திரம் தானாகவே எந்தவித முயற்சியும் இல்லாமல் அவர்களுக்குள்ளிருந்து கொப்பளித்து பொங்குகிறது. யார் இந்த நிலையை அடைகிறார்களோ அவர்கள் ஜபத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

எண்ணங்களையும், சிந்தனைகளையும் கட்டுப்படுத்தி, நல்லுணர்வுகளை உருவாக்க தியானம் ஒரு சிறந்த வழி. ஆழ்ந்த தியானம் என்பது முதலில் சிரமமாகத் தோன்றினால், கண்களை மூடிக்கொண்டு இஷ்ட தெய்வத்தின் நாமத்தையே ஜபம் செய்யுங்கள். நாளடைவில் ஜபம் செய்யும் நிலையே தியான நிலைக்கு மாறி, மனதை ஒருமுகப்படுத்த வாய்ப்பு கிட்டும். அப்படியும் மனம் அடங்காவிட்டால், மனத்தூய்மை ஏற்படுவதற்கு வழி பிறக்கும்.

மலர்களை கையில் எடுத்து முகர்ந்து பார்க்காவிட்டாலும், அவற்றின் மணம் நம் நாசியை எட்டுகிறது. சந்தனத்தை அரைத்தாலே நம் கையிலும் சந்தன மணம் கமழ்கிறது. அதைப்போலவே ஜபம் செய்தாலே தியானநிலைக்கு அது மூலாதார
சாதனையாக அமைந்துவிடுகிறது. ஜபமானாலும், தியானமானாலும் நம்பிக்கையோடு, பரிசுத்தமான உள்ளத்தோடு, தீவிர வைராக்கியத்தோடு செய்ய வேண்டும்.

மந்திரம் உடலை தூய்மைப்படுத்துகிறது. இறைவனின் மந்திரத்தை ஜபிப்பதால் மனிதன் தூய்மையடைகிறான்.

சாரதாதேவியார்.

நல்ல விஷயங்களைச் சொல்லும் போது கேட்பவருக்கும் தகுதி வேண்டும். தகுதி இல்லாதவனிடத் தில் நல்ல விஷயங்களைச் சொன் னாலும் பயனேதும் விளையாது. உலகியல் இன்பத்தின் மீதானஆசை, புறவுலக இன்பத்தையும், பந்ததத்தையும் தூண்டி விடுவதாக இருக்கும். வைராக்கியத்தின் (பக்தி) மீது வைக்கும் ஆசை நம்மை கட்டுக்களிலிருந்து விடுவிக் கும். உங்களுடைய துன்பங்களைக் கண்ணீருடன் இறைவனிடம் எடுத்துச் சொல்லுங்கள். மனச்சுமையை அவர்முன் இறக்கி வையுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை நிச்சயம் அவர் நிறைவேற்றி வைப்பார். இந்த உலகம் இறைவனுடையது. அவரது கையில் நாம் வெறும் பொம்மைகளே. அவர் நம்மை எப்படி வைத்தாலும், எங்கு வைத்தாலும் அதை நாம் திருப்தியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். விவேகமும், வைராக்கியமும் ஒவ்வொரு மனிதனுக்கும் கட்டாயமாக இருக்க வேண்டியவை. இவை இருந்தால் தான் இல்லறமும் சோபிக்கும். துறவறமும் சோபிக்கும். தானங்களில் சிறந்ததாக இருப்பது ஞானதானமே. தனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு வழங்கிடும் மகத்தான பண்பினை எல்லோரும் பெற வேண்டும்.

ஒவ்வொருவரும் குருவை சார்ந்து வாழுங்கள். அவரது சொல்கேட்டு அப்படியே நடந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு செய்யும் துன்பத்தை கூட நன்மையாக கருதி ஏற்றுக் கொள்ளுங்கள். குரு, தீமையான ஒருவிஷயத்தை உங்களுக்கு சொல்கிறார் என்றால் அதனால் மிகப்பெரும் நன்மை ஒன்று காத்திருக்கிறது என்பது உண்மை.

ஒருவருக்கு ஏற்படும் இன்பமும், துன்பமும் அவர்களது கர்மபலன்களுக்கு ஏற்பவே நிகழ்கிறது. ஆனால், இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டிருப்பதால் அதனை முழுமையாக நம்மிடமிருந்து விலக்க முடியாவிட்டாலும், அதன் வலிமையையாவது குறைத்து விடலாம். கர்மபலன்படி, உங்களுக்கு பெரிய காயம் ஒன்று ஏற்படுவதாக இருந்தால், இறைநாமத்தை சொல்லி அவரை வழிபட்டதன் பலனால் மிகச்சிறிய காயம் மட்டும் ஏற்படும்படி அமைந்துவிடும்.

நீங்கள் இங்கு இருப்பதும், இல்லாததும், ஒரு செயலை செய்வதும், செய்யாமல் இருப்பதும் உங்களது விருப்பப்படி நிகழ்வது இல்லை. அது இறைவனின் விருப்பப்படி நடக்கிறது. அவர் நீங்கள் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று தீர்மானித்திருந்தால் நீங்கள் அதன்படிதான் நடப்பீர்களே தவிர, வேறு வழியில் நிச்சயமாக செல்ல முடியாது. எனவே, உங்களை இறைவனிடம் அர்ப்பணித்து விடுங்கள்.

லாபம் கிடைக்கிறது என்பதற்காக பொய் பேசாதீர்கள். உண்மை பேசுபவன் இறைவனுக்கு பிடித்தமானவன் ஆகிறான். விரைவாகவே அவரை அடைந்து விடுகிறான்..

No comments:

Post a Comment